Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், சிவகங்கை மாவட்டம் மணலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.1,012 கோடி மதிப்பில் இரண்டு புதிய மின்னணு உற்பத்தி தொகுப்புகள் (Electronic Manufacturing Clusters - EMCs) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ள அவர், இந்த முன்னெடுப்பின் மூலம் இந்தியாவின் முக்கிய மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழகம் மேலும் வலுப்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்னணு உற்பத்தித் துறையின் விரிவாக்கம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்ட உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா (Make in India) மற்றும் டிஜிட்டல் இந்தியா (Digital India) போன்ற தொலைநோக்கு திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த மின்னணு உற்பத்தி தொகுப்புகள் தமிழகத்தில் அமைக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P