Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 24 ஜூலை (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் கடை உரிமையாளர் பலத்த காயமடைந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே வசிக்கும் கந்தசாமி (73) தனது வீட்டின் கீழ்தளத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி உரிய அனுமதியுடன் பட்டாசு விற்பனை செய்து வரும் அவர், கடந்த தீபாவளியில் விற்பனையாகாமல் மீதமிருந்த பட்டாசுகளை வீட்டின் மேல்தள அறையில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த அறையில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த கொசு பேட்டில் இருந்து பறந்ததாகக் கூறப்படும் தீப்பொறி பட்டாசுகள் மீது பட்டதால் திடீரென தீப்பற்றி, அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் அறையில் இருந்த கந்தசாமி பலத்த தீக்காயமடைந்தார். மேலும், தீ வேகமாக பரவி வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குமாரபாளையம் போலீசார், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வெப்படை மற்றும் குமாரபாளையம் நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
படுகாயமடைந்த கந்தசாமி மீட்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பகட்ட தகவலின்படி, கொசு பேட்டிலிருந்து பறந்த தீப்பொறியால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால், அதன் உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam