நீட் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு அதிகரித்துள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வுக்கு எதிராக கலைத்துறையினர் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதற்கு பதிலளித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மருத்துவக
தமிழி


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வுக்கு எதிராக கலைத்துறையினர் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதற்கு பதிலளித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், மருத்துவக் கல்வி குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் சிலர் நீட்டை விமர்சிப்பதாக கூறியுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதையும், அதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததை நேரில் பார்த்து மகிழ்ந்ததாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

நீட் அமலுக்கு வருவதற்கு முன்பு, வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக செலவில் பயிற்சி மையங்களில் படித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தி சேரும் சூழல் நிலவியதாகவும், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 145-இல் இருந்து 441 ஆகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 242-இல் இருந்து 382 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும், மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 51 ஆயிரத்தில் இருந்து 1.36 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மருத்துவத் துறையில் தரத்தை உறுதி செய்ய நுழைவுத் தேர்வு அவசியம் என்றும், உலகின் பல்வேறு துறைகளில் நுழைவுத் தேர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், உயிர் காக்கும் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறுவது நியாயமல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் மூலம் அரசு பள்ளி மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், மருத்துவக் கல்வி தொடர்பான முழுமையான தகவல்களை அறியாமல் நீட்டை எதிர்க்க வேண்டாம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P