மக்களவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஓம் பிர்லா வேண்டுகோள் - எதிர்க்கட்சி அமளியால் அவை ஒத்திவைப்பு
புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நீட்-யூஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட
மக்களவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஓம் பிர்லா வேண்டுகோள் - எதிர்க்கட்சி அமளியால் அவை ஒத்திவைப்பு


புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நீட்-யூஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்குள் நுழைந்து முழக்கங்களை எழுப்பியபோது சபாநாயகர் ஓம் பிர்லா,

கேள்வி நேரத்தின் போது நீங்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விவாதிக்க விரும்பும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை விவாதிக்க அனுமதிக்கப்படும்.

நேற்றும் இதைத்தான் கூறினேன். அவையில் முட்டுக்கட்டை ஏற்படுத்தாதீர்கள் என்று கூறினார்.

அமளி தொடர்ந்தபோது, நடவடிக்கைகள் தொடர நீங்கள் விரும்பவில்லை என்றால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று சபாநாயகர் அறிவித்தார்.

மழைக்கால கூட்டத்தொடரின் போது கடந்த ஒரு வாரமாக இரு அவைகளிலும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அமளியை தொடர்ந்து இந்த ஒத்திவைப்பு நடந்துள்ளது.

நீட்-யூஜி வினாத்தாள் கசிவு, மாணவர் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று காலை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் வாயிலில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தினர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரி வரும் நிலையில், வேண்டுமென்றே விவாதத்தை தடுப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி குற்றம் சாட்டுகிறது.

வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அமைச்சரவை பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b