Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 24 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வியாபாரி சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக தென்தாமரைகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.
நாகர்கோவில் சிறையில் மூன்று வார்டன்கள் மற்றும் எட்டு சிறை கைதிகளால் அவர் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒருபக்கம் சபரிவர்மன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட, அவர்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும், சபரிவர்மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்த மர்ம மரண வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைக் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகளும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதானவர்களிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனித்தனி அறைகளில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், தடயவியல் நிபுணர்கள் நாகர்கோவில் கிளைச் சிறையில் ஆய்வு மேற்கொண்டு இந்த வழக்கு தொடர்பான தடயங்களை சேகரித்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதிகளான அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய மூன்று கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் பணிகளை சிபிசிஐடி போலீசார் தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் தலைமையில் விசாரணை தொடங்கியது. சபரிவர்மன் தங்கி இருந்த ஜெயில் அறையை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனை மற்றும் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்து உள்ளதால் மீண்டும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்து உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN