Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் பழுதான செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை செய்யப்பட்டதாக அளித்த புகாரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி, சென்னை துறைமுகப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர், சென்னை கொளத்தூரில் செயல்படும் கார்7 கன்சல்டிங் நிறுவனம் மூலம் ஏழு மாதங்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் மதிப்பில் ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்கியதாக தெரிவித்தார்.
இதில் ரூ.2 லட்சத்தை ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.4 லட்சத்தை வங்கி கடன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
கார் வாங்கியபோது, அந்த வாகனம் 1 லட்சம் கிலோமீட்டர் மட்டுமே ஓடியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்ததாகவும், அதை நம்பியே வாகனத்தை வாங்கியதாகவும் ரகுபதி கூறினார்.
ஆனால், கார் வாங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு சொந்த ஊருக்குச் சென்றபோது, கும்பகோணம் அருகே உள்ள ஒரு ஷோரூமில் வாகனத்தை சர்வீசுக்கு விட்டதாகவும், அப்போது அந்த வாகனம் உண்மையில் 3 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக இயக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கார்7 கன்சல்டிங் நிறுவனத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது,
இந்த வாகனத்தை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கினேன்,இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு, பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த சில மாதங்களாக கார் அடிக்கடி பழுதாகி வருவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு தனது பணத்தை திருப்பித் தர வேண்டும் அல்லது பழுது நீக்கும் செலவை நிறுவனம் ஏற்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.
ஆனால், அதற்கு நிறுவனத்தினர் மறுப்பு தெரிவித்து, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்” என்று பதிலளித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், விசாரணைக்காக அழைக்கப்பட்ட போதிலும் போலீசார் தனது புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், கன்சல்டிங் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் ரகுபதி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், மனவேதனையடைந்த ரகுபதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதனால் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ரகுபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், அவர் முன்வைத்துள்ள கார் விற்பனை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ