Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி கனிம வளங்கள் பெருமளவில் கடத்தப்படும் சம்பவம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் எம்-சாண்ட், ஜல்லி கற்கள், பாறை கற்கள் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இதர கனிம வளங்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளாவில் கட்டுமான பணிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அங்கு கனிம வளங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து குறைந்த விலையில் கனிம வளங்களை வாங்கி, அதிக விலைக்கு விற்கும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த கடத்தலால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், முறையான அனுமதியின்றி செயல்படும் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், நிலத்தடி நீர்மட்ட குறைவும் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிகளை மீறி கனிமங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சேதமடைவதோடு, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்து வருகிறது.
புளியரை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b