இயக்குனர் பா.ரஞ்சித்தின் விமர்சனத்திற்கு த.வெ.க எம்எல்ஏ கடும் பதிலடி
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, சென்னையிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள்
TVK MLA hits back hard at Director Pa. Ranjith's criticism


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, சென்னையிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்,

தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது.

அவர் எழும்பூரில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை

என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் மீது தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ரேவந்த் சரண் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் மே நாளுக்குப் பிறகு திடீரென குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர் என்று சாடினார்.

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையை பொறுத்தவரை சாதி பார்த்து யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் அவரவர் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதிக்கு எந்த இடமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்களை எப்போதும் சாதி என்ற அடையாளத்திற்குள் சுருக்கிப் பார்க்கும் ஒரு மனநிலை இன்னும் சிலரிடம் இருப்பது வேதனைக்குரியது என்றும், இத்தகைய போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் எம்எல்ஏ ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b