கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு
சிவகங்கை, 24 ஜூலை (ஹி.ச) சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதல் பதினோராம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்ட அகழாய்விலும் சங்க கால
கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு


சிவகங்கை, 24 ஜூலை (ஹி.ச)

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதல் பதினோராம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்ட அகழாய்விலும் சங்க கால தமிழர்களின் நாகரிகச் சிறப்பை பறைசாற்றும் வகையில் ஏராளமான தொல்பொருட்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக இதே அகழாய்வில் மீன் உருவம் பதிக்கப்பட்ட உறை கிணறு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாண்டியர்களின் சின்னமாக கருதப்படும் மீன் உருவம் தொடர்ச்சியாக கிடைத்து வருவது, கீழடிக்கும் பாண்டிய நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பதினோராம் கட்ட பணியில் இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக தமிழர்களின் நகர நாகரிக வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் திறந்த நிலை மற்றும் மூடிய நிலை வடிகால் அமைப்புகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட உலைக் கலன்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள் என பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வு தமிழர்களின் தொன்மையை உலகிற்கு மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b