Enter your Email Address to subscribe to our newsletters

அமெரிக்கா, 24 ஜூலை (ஹி.ச.)
கட்டாய தொழிலாளர் முறை குறித்த கவலைகளை காரணம் காட்டி, 60 வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரி காலாவதியாவதை அடுத்து இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதிய வரிகள் வெள்ளிக்கிழமை(ஜூலை 24) கிழக்கு நேரப்படி அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வரும். இந்த வரிகள் 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை இருக்கும் என்றும், அமெரிக்காவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 99.4 சதவீதத்தை உள்ளடக்கும் என்றும் அந்த அலுவலகத்தின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய பொருளாதாரங்களை பாதிக்கும்.
அமெரிக்காவில் கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தடை உள்ளது, அதை நாங்கள் கடுமையாக அமல்படுத்தி வருகிறோம் எங்கள் வர்த்தக கூட்டாளிகளும் அதையே செய்வதற்கான காலம் வந்துவிட்டது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தனது பல வரிகளை ரத்து செய்து தீர்ப்பளித்ததால், அதிபர் தனது விருப்பப்படி அதிக வரிகளை விதிக்கும் அதிகாரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த பின்னடைவுக்கு பிறகு டிரம்ப் நிர்வாகம் விரைவாக செயல்பட்டு அதிபரின் வரிச்சுவரை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தது.
அந்த பின்னடைவுக்கு பிறகு, இறக்குமதி பொருட்கள் மீது 10 சதவீத வரியை மீண்டும் விதிக்க டிரம்ப் வேறு சட்ட அதிகாரங்களை பயன்படுத்தினார். ஆனால் அது 150 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
பல மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ஜூன் மாதம் முதலில் முன்மொழியப்பட்ட புதிய வரிகள், தற்போது அந்த இடத்தை பிடிக்கும். முந்தைய நடவடிக்கைகளை விட இந்த நடவடிக்கைகள் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக திட்டமிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்திய அறிவிப்பின்படி, கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள அல்லது அவ்வாறு செய்ய உறுதியளித்துள்ள நாடுகள் மீது குறைந்தபட்சமான 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்த பட்டியலில் கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அடங்கும்.
சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பல நாடுகள் அதிகபட்சமான 12.5 சதவீத வரிக்கு தகுதியானவை என்று கருதப்பட்டுள்ளன.
அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியம், தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை முன்னதாக அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப சில சலுகைகளை பெறுகின்றன.
இதற்கிடையில், எஃகு மற்றும் அலுமினியம் போன்ற துறை சார்ந்த வரிகளை ஏற்கனவே எதிர்கொள்ளும் பொருட்களுக்கு இந்த புதிய வரி பாதிப்பை ஏற்படுத்தாது.
சில எரிசக்தி பொருட்கள் மற்றும் உரங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும், அத்துடன் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்களுக்கும் விலக்கு உண்டு என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b