தூத்துக்குடியில் இளைஞர் மரண விவகாரம் - தன் மகனை அடித்துக் கொன்ற போலீசார் மீது நடவடிக்கை கோரி தாய் புகார்
தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) என்ற இளைஞர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவல் நிலையத்தில் வைத்து திடீரென உடல்நலக்
Youth's death in Thoothukudi: Mother files court complaint


தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) என்ற இளைஞர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவல் நிலையத்தில் வைத்து திடீரென உடல்நலக்குறைவு (வலிப்பு) ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக் குற்றஞ்சாட்டி, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று உடற்கூறாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அருணாச்சலத்தின் குடும்பத்தினரிடம் நீதிபதி உறுதியளித்தார்.

நீதிபதியின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர், அருணாச்சலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டனர். பின்னர், அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனது மகன் அருணாச்சலத்தை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் பரமேஸ்வரி நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய் ராஜசேகர் முன்பு இந்த புகார் மனுவை தாயார் பரமேஸ்வரி தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகன் அருணாச்சலம் இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தில், உதவி ஆய்வாளர் தரண்யா உட்பட மூன்று காவலர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாக தெரிவித்ததாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினரின் இந்த மனிதநேயமற்ற தாக்குதல் காரணமாகவே தனது மகன் உயிரிழந்ததாகவும், எனவே இந்த மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

Hindusthan Samachar / vidya.b