Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 25 ஜூலை (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களை முன்னிட்டு, சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு திரண்டனர்.
இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்களால் நிரம்பின.
இலவச தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களின் வரிசை சிலாதோரணம் பகுதி வரை நீண்டது.
முன்பதிவு டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 78 ஆயிரத்து 721 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 98 லட்சம் வருமானம் கிடைத்தது.
மேலும், 38 ஆயிரத்து 18 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
தேவஸ்தானம் சார்பில் 4 லட்சத்து 37 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
அன்னபிரசாத மையங்களில் 2 லட்சத்து 87 ஆயிரம் பக்தர்கள் உணவு அருந்தினர். திருமலையில் உள்ள மருத்துவ மையங்களில் 3 ஆயிரத்து 682 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA