Enter your Email Address to subscribe to our newsletters

விஜயநகரம் , 25 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் வட ஆந்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையம் ஆகஸ்டு 1-ந் தேதி திறக்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதையொட்டி, திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை அமைச்சர் நாரா லோகேஷ் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் நாரா லோகேஷ்,
போகாபுரம் விமான நிலைய திறப்பு விழா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வட ஆந்திராவின் 5 மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், சுமார் 13 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிலேயே மிகப்பெரிய திம்சா நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
விழாவில் பங்கேற்கும் பொதுமக்களின் வசதிக்காக 36 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மக்கள் பயணம் தொடங்கும் நேரம் முதல் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், சிற்றுண்டி மற்றும் உணவு வசதிகள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து விழா ஏற்பாட்டுக் குழுவின் முக்கிய அதிகாரி எம்.டி. கிருஷ்ணபாபு கூறுகையில், பிரதமரின் உரையை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒவ்வொரு 5 ஆயிரம் பேருக்கும் ஒரு எல்.இ.டி. திரை அமைக்கப்பட உள்ளது என்றார்.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இணை கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் விழா ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் வங்கலபுடி அனிதா, கிஞ்சரப்பு அச்சென்னாயுடு, கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ், தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் பல்லா ஸ்ரீனிவாசராவ், பா.ஜ.க. நிர்வாகி பி.வி.என். மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA