Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் இயக்குநர் கௌதமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
பேசிய அவர்,
நீட் என்ற எமன் முதலில் விழுங்கியது நம் அனிதாவைத்தான். அதன் பிறகும் பல மாணவர்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் நீட் பாதித்துக் கொண்டே இருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து, கரப்பான் பூச்சி அமைப்பு என்பது மரியாதைக்குரிய அமைப்பு. அதனுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் யாரும் பேசக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது, நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால், அமைச்சர் மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான சூழலை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுவார்கள் என்றும் கூறினார்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு வெறும் அறிக்கைகள் வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. களத்தில் இறங்கி மாணவர்களின் போராட்டத்திற்கு நேரடியாக துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக பிரதமரைச் சந்தித்து, நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாணவர்களின் நலனை முன்னிறுத்தி தமிழக அரசு இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இயக்குநர் கௌதமன் தெரிவித்தார்.
இயக்குநர் கௌதமனின் இந்த கருத்துகள், நீட் தேர்வு தொடர்பான அரசியல் மற்றும் மாணவர் போராட்ட விவாதங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.
அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ