Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கள்ளக்குறிச்சி மற்றும் தென் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் இன்று கட்சித் தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள், வாக்கு வங்கி நிலவரம், பூத் வாரியான செயல்பாடுகள் மற்றும் மாவட்ட அளவிலான கட்சி செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, அடிப்படை அமைப்புகளை பலப்படுத்துவது மற்றும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பிரிவு அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வார்டு வாரியாக வாக்காளர் தொடர்பை அதிகரித்தல், கூட்டணி வியூகம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிக்குழுக்களை அமைத்தல் மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து களப்பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் தொடர் ஆலோசனைக் கூட்டங்களின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதன் மூலம் கட்சி அமைப்பை வலுப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்த அதிமுக தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam