Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
சென்னையை அடுத்த கோட்டூர்புரம் பகுதியில் அஜாக்கிரதையாக ஜேசிபி வாகனத்தை இயக்கி, கல்லூரி மாணவர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் சிறார் நீதிக்குழுமத்திலும், சிறாருக்கு கனரக வாகனத்தைக் கொடுத்த ஜேசிபி உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரிலும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளரின் அறிவுறுத்தலின்படியும், சென்னை நகரில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறுவோர் மீதும், ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவோர் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவான்மியூரில் தங்கி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த உலகாதிபதி (21) என்ற மாணவர், கடந்த 22.07.2026 அன்று காலை கல்லூரிக்குச் செல்வதற்காக நண்பரின் இருசக்கர வாகனத்தில் கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
ஐஐடி வளாகத்திற்கு எதிரே அவர் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த ஜேசிபி வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உலகாதிபதி மீது ஜேசிபி வாகனத்தின் சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து E-1 மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஜேசிபி வாகனத்தை ஓட்டியது 17 வயதுடைய இளஞ்சிறுவன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தகுதியான ஓட்டுநர்களால் மட்டுமே இயக்கப்பட வேண்டிய ஜேசிபி போன்ற கனரக வாகனத்தை, உரிய பயிற்சி மற்றும் வயது தகுதி இல்லாத சிறுவனிடம் இயக்கக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜேசிபி உரிமையாளரான பள்ளிக்கரணையைச் சேர்ந்த ராசகுமார் (34) என்பவரை போலீசார் கடந்த 23.07.2026 அன்று கைது செய்து, ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட உரிமையாளர் ராசகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ