கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு வரை மெட்ரோ நீட்டிப்பு - திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ஒப்பந்தம் கோரியது
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) சென்னையின் தென் புறநகர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் அடுத்தகட்ட நகர்வாக, கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயா
கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு வரை மெட்ரோ நீட்டிப்பு - திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ஒப்பந்தம் கோரியது


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

சென்னையின் தென் புறநகர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் அடுத்தகட்ட நகர்வாக, கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தற்போது விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை இயங்கி வரும் முதல் கட்ட மெட்ரோ வழித்தடத்தின் நீட்டிப்பாகவே இந்த புதிய வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ தொலைவுக்கான திருத்திய திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இந்த வழித்தடத்தில் இரண்டடுக்கு மேம்பாலமாக கீழ்தளத்தில் உயர்மட்ட சாலையும், மேல்தளத்தில் மெட்ரோ பாதையும் அமைக்கும் வகையில் சுமார் 9,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தோடு நிறுத்தாமல் அதனை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பரனூர் வழியாக செங்கல்பட்டு வரை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

ஜிஎஸ்டி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதில் அடையவும் இந்த நீட்டிப்பு பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.

அதன் அடிப்படையில், கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையிலான புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறுகள், நிலத்தின் தன்மை, போக்குவரத்து தேவை, நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தயாரான பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b