Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 ஜூலை (ஹி.ச.)
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் காரில் தனியாக நின்று இருந்த ஆடிட்டரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று மிரட்டிப் பணம் பறித்ததோடு, விசாரிக்க வந்த காவல் துறையினரைத் தாக்கி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 திருநங்கைகளைக் கோவை துடியலூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆடிட்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே உள்ள காலி இடத்தில் காரை நிறுத்தி விட்டு போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர், ஆசை வார்த்தைகள் கூறி அவரை அருகில் இருந்த ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த மேலும் சில திருநங்கைகள் ஆடிட்டரைச் சூழ்ந்து கொண்டு, எங்கள் தோழியுடன் இருந்ததைப் படம் பிடித்து உள்ளோம்; இணையத்தில் விடுவோம் என மிரட்டி, ஜி-பே (GPay) வழியாக ரூ.11,700-ஐ வலுக்கட்டாயமாகப் பறித்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஆடிட்டர் உடனடியாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு எஸ்.ஐ மற்றும் தலைமைக் காவலர் செல்வராஜ் ஆகியோர் அங்கு நின்று இருந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள், காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, தரையில் கிடந்த கற்களை வீசி ரோந்து வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியை நொறுக்கினர். மேலும் தலைமைக் காவலர் செல்வராஜின் சட்டையைக் கிழித்துக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை மீட்ட சிறப்பு எஸ்.ஐ, அவரைச் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகளான மொபீனா (27), மகதி (21), இனியா (22) மற்றும் ஆரஞ்ச் (21) ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துடியலூர் பகுதியில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN