கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகளுக்கு இடமில்லை - அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ். ரமேஷ் கடும் எச்சரிக்கை
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோயில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அனைத்து அதிகாரிகளுக்கும் ம
Ramesh


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோயில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அனைத்து அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கோயில் நிர்வாகத்தில் லஞ்சம், நிதி முறைகேடு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட எந்தவொரு தவறும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோயில் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவிருந்தால், அதன் முழு விவரங்களையும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் மற்றும் ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அனைத்து கோயில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நீண்ட நேரக் காத்திருப்பைத் தவிர்க்க சீரான தரிசன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகும் நிலை உருவாகக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரிகளும் தினசரி காலை மற்றும் மாலை கோயில்களை நேரில் ஆய்வு செய்து, நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முறைகேடுகளைத் தடுக்கத் தவறுதல், தகவல்களை மறைத்தல் அல்லது அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வராதது கடுமையான அலட்சியமாகக் கருதப்படும் என்றும், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ். ரமேஷ் எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ