காவிரி உரிமையை பேச்சுவார்த்தையில் பணயம் வைக்கக் கூடாது – முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) கர்நாடக அரசுடன் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
M K Stalin


Gg


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

கர்நாடக அரசுடன் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமாகப் போராடி பெற்ற உரிமைகளைச் சிதைக்கும் வகையில்தான் இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். இதனால் எதிர்கால நீதிமன்ற விசாரணைகளிலும் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இதேபோன்ற பேச்சுவார்த்தை யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் திமுக அரசு உறுதியாக அதனை நிராகரித்ததாகவும், காவிரி உரிமை தொடர்பான விவகாரத்தில் சமரசத்திற்கு இடமளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைப்பிடித்ததாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், கூட்டணி அரசியல் மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாக்கப்படக் கூடாது என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஒருமித்த குரலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, கர்நாடகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை தமிழ்நாடு முதலமைச்சர் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தனது பதிவின் மூலம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மு.க. ஸ்டாலினின் இந்த பதிவு, காவிரி நீர் உரிமை, தமிழ்நாடு–கர்நாடக உறவு மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ