பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த நெல்லை மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை, 25 ஜூலை (ஹி.ச.) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேயர் வீட்டில் நடைபெற்ற கொலை மிரட்டல் சம்பவத்திற்
சரவணன்


நெல்லை, 25 ஜூலை (ஹி.ச.)

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மேயர் வீட்டில் நடைபெற்ற கொலை மிரட்டல் சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதால், பல்வேறு அரசியல் யூகங்கள் எழுந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனின் இல்லத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேயர் ராமகிருஷ்ணன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து பல்வேறு அரசியல் யூகங்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் இதுகுறித்து மேயர் ராமகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்,

நயினார் நாகேந்திரன் அவர்களை திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக மட்டுமே அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

இதற்கு வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை.

இதனை வேறு விதமாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம், என்று விளக்கம் அளித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P