Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 25 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாளுடன் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் ரமேஷ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக பணியாற்றியவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்குத் தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பழனி மடத்திற்கு சொந்தமான நிலம் தொடர்பான விவகாரத்தில் சிலர் தேவையற்ற அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், அந்த நிலம் இருப்பதே இந்த விவகாரம் எழுந்த பிறகுதான் எனக்குத் தெரியும். எனது பரிந்துரையின் பேரில்தான் முதலமைச்சர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். எனக்கும், எனது உறவினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அரசியல் செய்வதை விட, மக்களுக்கான பணியில் கவனம் செலுத்தினால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.
நீட் தேர்வு குறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. அதற்காக கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை அரசு மதிக்கிறது. ஆனால், அந்தப் போராட்டத்திற்குள் சிலர் புகுந்து அதை முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற முயன்றால், அரசு அதனை சட்டப்படி கையாளும். நீட் தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P