Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 25 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு மர்மநபர்கள் அரிவாளுடன் சுற்றித் திரிந்து பெட்ரோல் பங்க், வாகனங்கள் மற்றும் சாலையோர பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, நள்ளிரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்ததாகக் கூறப்படும் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் முதலில் திசையன்விளையில்உள்ள பெட்ரோல் பங்கிற்குள் புகுந்தது. அங்கு இருந்த பெட்ரோல் நிரப்பும் பம்பிங் மெஷின்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி சேதப்படுத்தினர்.
அப்போது பணியில் இருந்த பெட்ரோல் நிரப்பும் ஊழியரை நோக்கியும் மர்ம கும்பல் அரிவாளுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அதே கும்பல் திசையன்விளை இட்டமொழி சாலையில் வழிநெடுகிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, வேன், டிரக்கர், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களின் கண்ணாடிகளை அரிவாளால் வெட்டி உடைத்து சேதப்படுத்தியது.
மேலும், சாலையோரத்தில் இருந்த கரும்புச்சாறு இயந்திரத்தையும் கீழே தள்ளி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இட்ட மொழியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்பிவிட்டு அங்கு வேலை பார்த்து வரும் ஊழியர்களை அறிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
உயிர் பயத்தில் ஓடிய ஊழியர் அருகில் உள்ள குளத்திற்குள் இறங்கி தப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த தொடர் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
காலையில் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் சேதமடைந்திருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற திசையன்விளை காவல்துறையினர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, மர்ம கும்பலை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட ரவுடிச செயலா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் அரங்கேறிய இந்த அரிவாள் ரவுடிசம் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam