Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 25 ஜூலை (ஹி.ச)
தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டாரத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பஃபர் மண்டலம் மற்றும் கோர் மண்டலத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், பட்டா நிலங்களில் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்காமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளை வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும், முக்கிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b