Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்துள்ளது.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் இன்று ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் தியாகராய நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு சிபிஐ அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) தனது 47 அதிகாரிகளைப் பணியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிபிஐ பல்வேறு முக்கியப் புள்ளிகளைக் கைது செய்து, அவர்களின் கையெழுத்து மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் தீவிர தடயவியல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த வாரம் சிபிஐ நீதிமன்றத்தில் தனது இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b