Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த மாணவர்களின் தொடர் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் ஓயாது என இந்திய மாணவர் சங்கம் (SFI) மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு என்பது வெறும் தேர்வு மட்டுமல்ல, அது சமூக நீதியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கடுமையாக சாடியுள்ளது.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை பணம் படைத்தவர்களுக்கான கனவாக மாற்றும் முயற்சியே நீட் தேர்வு என்றும், எனவே இந்தத் தேர்வை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரை தமிழகம் முழுவதும் கல்லூரிகள் தோறும், வீதிகள் தோறும் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு அதனை கிடப்பில் போட்டு வைத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் SFI குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய அளவிலான போராட்டம் ஒரு அடையாளப் போராட்டம் தான், உண்மையான களம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்றும், தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும், நீட் தேர்வால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியும் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம், வரும் நாட்களில் அனைத்து மாணவர் அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b