Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்றும், இதை மீறினால் துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில்,
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக வழிகாட்டுதல் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு பெற்ற நடைமுறை இதுதானா என முதல்வரை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2025-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் தலைமையில் ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் கூட்டம் நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாகக் கூறி, அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 32 பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் அந்த மாநாட்டில் பங்கேற்க விடாமல் தடுத்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அப்போது இருந்த வீரம், தைரியம் தற்போது இல்லையா? அவை சினிமாவில் மட்டும்தானா என முதல்வரை அப்பாவு விமர்சித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை உலகிற்கு அளித்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே அதனை மூன்றாவதாக பாட வைக்கும் முயற்சிக்கு ஆளுநருக்கு துணைபோகும் முதல்வரே, தமிழ்நாட்டில் நடைபெறுவது த.வெ.க. ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறு பங்கம் ஏற்பட்டால்கூட மாணவர்கள் தன்னெழுச்சியுடன் எழுந்து முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவார்கள் என்றும், அதை மூன்றாவதாக பாட வேண்டும் என நிர்பந்தித்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அப்பாவு தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P