Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக்குழு, 2026-2027-ஆம் கல்விய ஆண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இணையதளத்தை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.
முன்னதாக ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் 79,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 70,485 பேர் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் பதிவை நிறைவு செய்யாத மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை, ஜூலை 26-ஆம் தேதி காலை 10:00 மணிக்குத் தொடங்கி, ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 03:00 மணியுடன் நிறைவடையும்.
தகுதியான மாணவர்கள் tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அதில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்ய இயலாது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விண்ணப்பங்களில் ஏதேனும் சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தால் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கூராய்வு (Document Verification & Scrutiny) கட்டங்களின் போது அவை பரிசீலிக்கப்பட்டுச் சரி செய்யப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் நலன் கருதி வழங்கப்படும் ஒருமுறை மட்டுமேயான சிறப்பு வாய்ப்பு என்பதால், இனிமேலும் காலநீட்டிப்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, மாணவர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / P YUVARAJ