Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 25 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் தொடர்பாக எந்தவொரு அசம்பாவிதமும் நடந்தாலும், அதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களே பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கல்லூரி நிர்வாகங்களுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், பொறுப்பும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு கல்லூரியிலும் சிறப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்க வேண்டும்.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ரகசியமாக தெரிவிக்கும் வசதிக்காக இலவச தொலைபேசி எண் மற்றும் க்யூஆர் (QR) குறியீடு அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மறுவாழ்வு சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவதுடன், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் வழக்குகளில் மீண்டும் மீண்டும் சிக்கும் குற்றவாளிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் போதைப்பொருள் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA