Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 ஜூலை (ஹி.ச.)
தென்காசி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இந்தக் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலானது தென்காசி மாவட்டத்தில் நிலவி வந்தன.
குறிப்பாக, தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை என்கின்ற விகிதத்தில் வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து வாகனங்களை பிரித்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலானது நிலவி வந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அதாவது சனிக்கிழமை காலை 4 மணி முதல் திங்கட்கிழமை காலை 11 மணி வரை கனிம வள வாகனங்கள் இயக்க தென்காசி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து இந்தியன் லாரி அசோசியேஷன் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணையின் போது, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை விதிமுறைகளின் படி வாகனங்களை இயக்கவும், பள்ளி, கல்லூரி நேரங்களில் வாகனங்களை இயக்க தடை விதித்த உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கனிம வள வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்கின்ற உத்தரவை ரத்து செய்தது.
மேலும், முறையாக அரசாணை வெளியிட்ட பின்னரே இது தொடர்பான நடவடிக்கையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், தற்போது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜித் சிங் தென்காசி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கனிமவள வாகனங்கள் இயக்க தடை விதித்தும் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN