மாணவர் போராட்டத்துக்கு மெரினாவை திறக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நேரடியாக ஆதரவளிக்க வேண்டும் என்றும், அதற்கான அடையாளமாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று
Thamimun


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நேரடியாக ஆதரவளிக்க வேண்டும் என்றும், அதற்கான அடையாளமாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

திரையரங்குகளில் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களாக இல்லாமல், சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களாக நீங்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.

இதுவே தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்று பாராட்டினார்.

மேலும், தமிழ்நாடு அரசியல் அறிவற்ற மாநிலமாக மாறிவிட்டதோ என்ற கவலை சில நாட்களாக இருந்தது.

அந்த எண்ணத்தை மாணவர்கள் தங்களின் போராட்டத்தின் மூலம் உடைத்தெறிந்துள்ளனர்.

இனி தமிழ்நாட்டின் தலைவர்களை திரையரங்குகளில் தேடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

புரட்சியாளர்களான சே குவேரா மற்றும் ஹோ சி மின் போன்றோரின் போராட்ட உணர்வை இன்றைய மாணவர்களின் முகங்களில் காண்கிறேன் என்றும், இளைஞர்களின் இந்த எழுச்சி சமூக மாற்றத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் தமிமுன் அன்சாரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு உண்மையிலேயே நீட் தேர்வை ஒழிக்க விரும்பினால், மாணவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். அதனை நிரூபிக்கும் வகையில், முதலமைச்சர் உடனடியாக மெரினா கடற்கரையை மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்காக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிமுன் அன்சாரியின் இந்த கருத்து, நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்த அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ