Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 25 ஜூலை (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புற கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவில், சுமார் 5 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட குறுகிய துவாரத்திற்காக பிரபலமானது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான நன்றிக்கடனாக அந்த குறுகிய துவாரத்தின் வழியாக உள்ளே சென்று வெளியே வந்தால் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பது வழக்கம்.
குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், மோட்ச தீபம் என்ற பெயரில் இந்தத் தலத்தை சிறப்பு நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் (ராஜமுந்திரி) பகுதியைச் சேர்ந்த 36 வயதான மணிகுமார், கோவிலின் குறுகிய துவாரத்தின் வழியாகச் செல்ல முயன்றபோது வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மணிகுமார் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P