தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம் - 10-வது தளத்தில் பிரம்மாண்ட புதுப்பித்தல் பணிகள் தீவிரம்
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம், பாரம்பரியமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சரின் பிரத
Cm


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம், பாரம்பரியமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சரின் பிரத்தியேக அறைகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த இடமாற்றப் பணிகளின் ஒருபகுதியாக, 10-வது தளத்தில் இருந்த கூட்ட அரங்கம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

மேலும், நிதித்துறைக்குச் சொந்தமான விருதுகள் மற்றும் சாமி சிலைகள் உள்ளிட்டவை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு, முதலமைச்சருக்கு ஏற்றவாறு புதிய அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமையவுள்ள முதலமைச்சரின் அறையானது, சுற்றிலும் உள்ள சென்னையின் முக்கிய இடங்களைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் சிறப்புமிக்க இட அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த அறையில் இருந்து பார்த்தால் தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முழுப் பகுதி, வங்கக்கடல் மற்றும் மெரினா கலங்கரை விளக்கம் வரை தெளிவாகத் தெரியும் வசதி உள்ளது.

மேலும், முன்புறத்தில் சென்னை துறைமுகத்தின் சரக்கு ரயில் இயக்கம், கப்பல்கள் நின்று செல்லும் பகுதி, ரிசர்வ் வங்கி மற்றும் போர்ட் டிரஸ்ட் வளாகமும், பின்புறத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் இத்தளம் அமைந்துள்ளது.

முதலமைச்சரின் பிரத்தியேக அலுவலகம் மற்றும் தனிச்செயலாளர்களின் அலுவலகங்கள் அனைத்தும் அடுத்த மாத இறுதியில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

இதற்கான கட்டுமான மற்றும் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் தற்போது இறுதிமுனை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ