தூத்துக்குடி காவல் நிலைய மரணம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
தூத்துக்குடி, 25 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி காவல் நிலையத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞர் அருணாச்சலம் மரணம் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் வலிய
சரத்குமார்


தூத்துக்குடி, 25 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞர் அருணாச்சலம் மரணம் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அருணாச்சலம் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

நீட் தேர்வு குறித்து பேசிய அவர்,

காவல்துறையில் சேர்வதற்கு எழுத்துத் தேர்வும் உடற்தகுதித் தேர்வும் இருப்பது போல, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கும் நீட் தேர்வு அவசியம். நீட் தேர்வு இருக்கக் கூடாது என்று கூறுவது நியாயமல்ல என்று தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் 13 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் வினாத்தாள் கசிவு சரியானது என்று நான் கூறவில்லை. ஆனால், அதைக் காரணமாகக் கொண்டு நீட்டை முழுமையாக எதிர்ப்பது சரியல்ல என்றார்.

இளைஞர்களின் போராட்டம் குறித்துப் பேசிய அவர், வெளிநாட்டு சதிகளுக்கு இளைஞர்கள் பலியாகக் கூடாது. அவர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு பொறுப்புடன் வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.

இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட சரத்குமார், நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் முயற்சிகள் குறித்து சந்தேகம் எழுகிறது. பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கும் எந்தச் சதியிலும் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இந்தியா வல்லரசாக உருவெடுத்து வரும் நிலையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P