தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக் குமாரிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின்படி ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரிடம் திருவல்லிக்கேணி போலீசார் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசார
Senthil Balaji


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின்படி ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரிடம் திருவல்லிக்கேணி போலீசார் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் தலைமறைவாகி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் பிணை ஆவணங்களை (Surety) சமர்ப்பித்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்தது.நீதிமன்ற உத்தரவின்படி பிணை ஆவணங்களைச் சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.

அப்போது, எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி மட்டுமே கையெழுத்திட்டார்.

அசோக் குமார் இந்த வழக்கில் இன்னும் பிணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் அவர் கையெழுத்திடவில்லை என்றும், மாறாக கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் பெற்ற முன்ஜாமீன் அடிப்படையில் மட்டுமே அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்திட்ட பின்னர் இருவரையும் உடனடியாக வெளியே செல்ல அனுமதிக்காத போலீசார், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் இருவரிடமும் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்.

இவ்வழக்கில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நரேஷ் என்பவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் சதித் திட்டம் குறித்து செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரிடம் கேள்விகளை எழுப்பித் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.சுமார் இரண்டரை மணி நேர விசாரணைக்குப் பிறகே இருவரையும் போலீசார் வெளியே செல்ல அனுமதித்தனர்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த செந்தில் பாலாஜியிடம், விசாரணை குறித்தும் காவல்துறையினரின் அணுகுமுறை குறித்தும் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு, இதுகுறித்து இப்போது எதுவும் பேச வேண்டாம், பிறகு சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் மௌனமாகப் புறப்பட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ