Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 25 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி மூங்கில் அய்யனார் கோயிலில் பட்டியலின சமூக மக்கள் வழிபாடு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர், மூங்கில் அய்யனார் சுவாமியை பல்லக்கில் எடுத்துச் செல்ல தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக கோயில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தென்னங்கீற்று பந்தலை அவர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் சுவாமியை கருவறையிலிருந்து வெளியே எடுத்து வரவும் அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே “ஆகம விதிகளின்படி மதியம் ஒரு மணிக்கு மேல் சாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது” என காரணம் கூறி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் மாற்று சமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தவிர்கும் வகையில் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P