எர்ரச்சந்தன கடத்தல் கும்பலுக்கு உதவிய வனத்துறை அதிகாரி கைது - துணை முதல்வர் பவன் கல்யாண்
கடப்பா , 26 ஜூலை (ஹி.ச.) எர்ரச்சந்தன கடத்தல் கும்பலுக்கு உதவி செய்ததாக வனத்துறை பீட் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அவத
A


கடப்பா , 26 ஜூலை (ஹி.ச.)

எர்ரச்சந்தன கடத்தல் கும்பலுக்கு உதவி செய்ததாக வனத்துறை பீட் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அவதூத காசிநாயன மண்டலத்தில் எர்ரச்சந்தன கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 78 எர்ரச்சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வரிகுண்ட்லா கிராமம் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது வீட்டு உபயோகப் பொருட்கள் கொண்டு செல்வதாக கூறி, பொலேரோ மேக்ஸ் டிரக்கில் எர்ரச்சந்தன மரக்கட்டைகளை கடத்தி சென்ற ஹரியானாவை சேர்ந்த சன்னி, ரமேஷ் ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த வாகனம் மற்றும் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஜோதி வனப்பகுதியில் பணியாற்றிய பீட் வன அலுவலர் மல்லிகார்ஜுனன், கடத்தல் கும்பலுக்கு உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பெங்களூரு, ஹரியானா மற்றும் கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்படும் முக்கிய நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களை கைது செய்ய சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்-மந்திரியும், வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

எர்ரச்சந்தன கடத்தலுக்கு யார் துணை நின்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட வனத்துறை அதிகாரியின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், எர்ரச்சந்தன கடத்தலை தடுக்க ‘ஆபரேஷன் அரண்யா’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA