Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 26 ஜூலை (ஹி.ச.)
ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகரும், இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தமூரி பாலகிருஷ்ணனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த சந்திரபாபு நாயுடு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உடல்நிலை முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட சிகிச்சை முறைகள் குறித்து விவரங்களை கேட்டார்.
கடந்த 21-ந் தேதி ராஜமுந்திரியில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது பாலகிருஷ்ணனுக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது.
இதில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், மறுநாள் சிறப்பு விமானம் மூலம் அவர் ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டு ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது இடது காலில் உள்ள குவாட்ரிசெப்ஸ் டெண்டன் (தொடையின் தசையை முழங்கால் எலும்புடன் இணைக்கும் திசு) கிழிந்திருப்பது தெரியவந்தது.
மேலும் முழங்காலின் இருபுறங்களிலும் உள்ள சில முக்கிய திசுக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து கடந்த 23-ந் தேதி மருத்துவர்கள் பாலகிருஷ்ணனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், காயம் ஏற்பட்ட பகுதியில் தேங்கியிருந்த ரத்தம் அகற்றப்பட்டு, கிழிந்த டெண்டன் மீண்டும் முழங்கால் பகுதியில் இணைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட திசுக்களுக்கும் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது பாலகிருஷ்ணனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏஐஜி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA