Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 26 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில்,
நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் எழுச்சியுடன் பங்கேற்றதை கண்டு பிரதமர் நரேந்திர மோடி அச்சமடைந்ததாகவும், அதன் விளைவாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து விலகச் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது குறித்து உச்சநீதிமன்றத்தை சுட்டிக்காட்டி, இதுபோன்ற தாமதங்கள் தொடர்ந்தால் அண்டை நாடுகளைப் போல Gen Z இளைஞர்கள் கொதித்தெழும் சூழல் உருவாகலாம் என்று ஏற்கனவே எச்சரித்திருந்ததை நினைவுபடுத்தியுள்ளார்.
அதேபோல், விவசாயிகள் தொடர் போராட்டத்தால் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது பிரதமர் மோடிக்கு முதல் தோல்வி என்றும், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியால் இரண்டாவது தோல்வி ஏற்பட்டதாகவும், தற்போது நீட் விவகாரத்தில் Gen Z இளைஞர்கள் மூன்றாவது தோல்வியை அளித்துள்ளதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரசால் முடியாததை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்து காட்டியுள்ளது.
இருப்பினும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே நிரந்தர தீர்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தமிழக முதல்வரையும் விமர்சித்துள்ள அப்பாவு, தமிழக மக்களும் விரைவில் தக்க பதிலை வழங்குவார்கள் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P