பெர்லின் பிரைட் பேரணியில் கூட்டத்தின் மீது வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்
பெர்லின், 26 ஜூலை (ஹி.ச.) எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் உரிமைகளைக் கொண்டாடும் வகையில் ஜெர்மனி முழுவதும் நேற்று நடைபெற்ற தொடர் நிகழ்வுகளில் மிகப்பெரியதான பிரைட் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெர்லின் நகர மையத்தில் நடைபெற்ற பிரைட் நிகழ்வின் போது
பெர்லின் பிரைட் பேரணியில் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - 16 பேர் படுகாயம்


பெர்லின், 26 ஜூலை (ஹி.ச.)

எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் உரிமைகளைக் கொண்டாடும் வகையில் ஜெர்மனி முழுவதும் நேற்று நடைபெற்ற தொடர் நிகழ்வுகளில் மிகப்பெரியதான பிரைட் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெர்லின் நகர மையத்தில் நடைபெற்ற பிரைட் நிகழ்வின் போது நேற்று இரவு 10 மணி அளவில் கூட்டத்தின் மீது வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களை தேடும் தீவிர வேட்டை நடைபெற்று வருவதாகக் கூறிய போலீசார், அப்பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற டியர்கார்டன் பூங்கா அருகே காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர், சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

இந்த கொடூரமான செயல் முழுமையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதை உறுதி செய்வேன் என்று ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கிறிஸ்டோபர் தெரு தினம் என்றும் அழைக்கப்படும் ஆண்டுதோறும் நடைபெறும் பிரைட் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டியர்கார்டன் பூங்காவிற்குள் ஒரு வாகனம் நுழைந்து பலரை மோதி காயப்படுத்தியதாக நாங்கள் நம்புகிறோம் என்று போலீசார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஒரு கார் மிக வேகமாக கூட்டத்திற்குள் நுழைந்ததைப் பார்த்ததாகவும், மக்கள் அலறியபடி டியர்கார்டன் பூங்காவிற்குள் ஒளிந்து கொள்ள ஓடியதாகவும் சாட்சிகள் கூறினர்.

பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையின் மீட்புப் பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை நமது சுதந்திரமான மற்றும் திறந்த மனப்பான்மை கொண்ட சமூகத்தின் மீதான தாக்குதல் என்று பெர்லின் மேயர் காய் வெக்னர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. மிகுந்த அவசரத்துடன் விசாரணை நடத்தும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ தகவல்கள் மற்றும் காட்சிகளை வழங்குமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b