Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச)
முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலேயே கோவை, மதுரை உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் இந்த திட்டம் முதன்முறையாக நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் திருத்தப்பட்ட பரிந்துரையை அனுப்பியது. இந்த இரண்டாவது பரிந்துரையையும் தற்போது ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
இதற்கு ஒன்றிய அரசு கூறும் முக்கிய காரணம் மக்கள் தொகை தான். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூரில் 15.84 லட்சம் பேரும், மதுரையில் சுமார் 15 லட்சம் பேரும் மட்டுமே உள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி ஒரு நகரில் மெட்ரோ திட்டத்தை திட்டமிட குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தினாலும் பயண நேரம் குறையாது, போதிய பயணிகள் பயன்பாடு இருக்காது என்றும், குறைவான பயண தூரம் கொண்ட இந்த வழித்தடங்களுக்கு மெட்ரோவுக்கு பதிலாக பஸ் ரேபிட் சிஸ்டம் போன்ற மாற்று போக்குவரத்து முறைகளை ஆராயலாம் என்றும் ஒன்றிய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசின் திட்டத்தின்படி, கோவையில் ரூ.10,740.49 கோடி மதிப்பில் 34.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 32 நிலையங்களுடனும், மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11,360 கோடி மதிப்பில் 23 நிலையங்களுடனும் மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் கோரப்பட்டபோது அதற்கான ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b