விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்
தூத்துக்குடி, 26 ஜூலை (ஹி.ச) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். முருகனின் ஆறுபடை வீடுகளில் மற்ற ஐந்து வீடுகளும் மலைப் பகுதிகளில் அமைந்திருக்க, இந
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்


தூத்துக்குடி, 26 ஜூலை (ஹி.ச)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். முருகனின் ஆறுபடை வீடுகளில் மற்ற ஐந்து வீடுகளும் மலைப் பகுதிகளில் அமைந்திருக்க, இந்தத் தலம் மட்டும் கடற்கரையில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வாகனங்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள்:

வெயிலின் தாக்கத்தைக் குறைக்கக் காத்திருப்புப் பந்தல்களில் குடிநீர் மற்றும் மோர் வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b