நாமக்கல்லில் முட்டை விலை குறைவு - சென்னையில் ரூ.7.10-க்கு விற்பனை
நாமக்கல், 26 ஜூலை (ஹி.ச.) முட்டை உற்பத்தியின் தலைநகரம் என அழைக்கப்படும் நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் குறைந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நாமக்கல் மண்டலத்திற்கான இன்றைய விலை நிலவரத்தை அறிவித்துள்ளது. அதன்படி பண்ணைகளி
நாமக்கல்லில் முட்டை விலை குறைவு - சென்னையில் ரூ.7.10-க்கு விற்பனை


நாமக்கல், 26 ஜூலை (ஹி.ச.)

முட்டை உற்பத்தியின் தலைநகரம் என அழைக்கப்படும் நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் குறைந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நாமக்கல் மண்டலத்திற்கான இன்றைய விலை நிலவரத்தை அறிவித்துள்ளது.

அதன்படி பண்ணைகளில் முட்டையின் கொள்முதல் விலை ஒன்று ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே முட்டை விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து உற்பத்தி சற்று அதிகரித்துள்ளதாலும், தீவன விலை சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை காலம் முடிந்து சத்துணவு திட்டத்திற்கான முட்டை தேவை அதிகரிக்கும் வரை விலை இதே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் பண்ணை விலை குறைவின் எதிரொலி சென்னை சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் மொத்த விற்பனை மையங்களில் ஒரு முட்டையின் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது ரூ.7.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போக்குவரத்து செலவு, கையாளுதல் கட்டணம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு சில்லறை கடைகளில் இதன் விலை ரூ.7.50 வரை விற்கப்படலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்த விலை குறைவு இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதனிடையே கறிக்கோழி விலை நிலவரமும் வெளியாகியுள்ளது. நாமக்கல் பகுதியில் பண்ணைகளில் உயிருள்ள கறிக்கோழி ஒரு கிலோ ரூ.134-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கறிக்கோழி உற்பத்தி சீராக உள்ளதால் விலை கடந்த சில நாட்களாக இதே நிலையில் நீடித்து வருவதாக கோழிப்பண்ணையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b