டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் வாபஸ் - பந்தல்கள் அகற்றி தூய்மைப் பணிகள் தீவிரம்
புதுடெல்லி, 26 ஜூலை (ஹி.ச.) நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் மற்ற
Jantar mantar


புதுடெல்லி, 26 ஜூலை (ஹி.ச.)

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, சாலைகள் மற்றும் நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போராட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பலர் தங்களது சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் சென்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வெளியேற்றம் அமைதியான முறையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெல்லி போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டம் முடிந்த பிறகும் அங்கு தேவையற்ற வகையில் யாரும் திரளக் கூடாது என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி, அமைதியான முறையில் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர்.

போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P