தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் இளைஞர்களின் ஜனநாயக வெற்றி – எம்.எச். ஜவாஹிருல்லா
சென்னை, 26 ஜூலை (ஹி.ச) ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமையான ஜனநாயகப் போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கான வரலாற்றுச் சான்று என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிர
Jawahirulla


Gg


சென்னை, 26 ஜூலை (ஹி.ச)

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமையான ஜனநாயகப் போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கான வரலாற்றுச் சான்று என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு ஒருபோதும் பின்வாங்காது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தாலும், 2015-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், 2018-ஆம் ஆண்டு #MeToo இயக்கத்துக்குப் பிறகு எம்.ஜே. அக்பரின் பதவி விலகல், 2021-ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போன்ற நிகழ்வுகள் மக்களின் ஒற்றுமையான போராட்டத்தின் வலிமையை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகலும் அதே வரிசையில் இடம்பெறுவதாகக் கூறிய அவர், அதிகாரத்தின் அகந்தையை உடைக்கும் சக்தி ஜனநாயகப் போராட்டங்களுக்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலைமுறை என்றும், கடந்த கால அரசுகளை குறை கூறாமல், வேலைவாய்ப்பின்மை, கல்வி வணிகமயமாக்கல், தேர்வுக் கசிவுகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு தற்போதைய ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் NEET, CUET, UGC-NET, JEE உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், தேர்வு ரத்துகள் மற்றும் நிர்வாகக் குழப்பங்கள் மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மாறினாலும், கல்வி நிர்வாகத்தில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் நீட் திணிப்பு, இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கம், பல்கலைக்கழக தன்னாட்சியில் தலையீடு ஆகியவை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் கேள்வி கேட்டால் தேசவிரோதிகளாக சித்தரிப்பதும், போராட்டம் நடத்தினால் காவல்துறையை பயன்படுத்துவதும், சமூக ஊடக கருத்துகளுக்கே வழக்குப்பதிவு செய்வதும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் என்றும் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

மேலும், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவு அல்ல; அது புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம் என்றும், மாணவர்களின் குரல் இனி வேலைவாய்ப்பு, விவசாயம், தொழிலாளர் உரிமை மற்றும் மாநில உரிமைகளுக்கான தேசிய குரலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தமிழ்நாடு தொடர்ந்து சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம், மொழி உரிமை, மாநில சுயாட்சி மற்றும் கல்வி உரிமைக்காக போராடி வருவதாக குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசு ஆணவ அரசியலை கைவிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு கல்வி நிர்வாகத்தில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ