Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 26 ஜூலை (ஹி.ச.)
தண்ணீர் கோரிக்கையை வலியுறுத்தி கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று அத்திப்பள்ளி பகுதியில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க இரு மாநில எல்லைப் பகுதிகளிலும், குறிப்பாக ஓசூர் மற்றும் அத்திப்பள்ளி சோதனைச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எல்லையைக் கடக்கும் பிற வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கர்நாடகா செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக வேலைக்கு செல்வோர், மருத்துவ சிகிச்சைக்காக செல்வோர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஓசூர் பேருந்து நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மாற்று ஏற்பாடாக தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமை சீராகும் வரை பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், போராட்டம் முடிந்த பின்னர் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b