Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
காவிரி நதிநீர் பிரச்சினையில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையை பாதுகாக்க அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த மே 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு, மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததாகவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜூன் 19-ஆம் தேதி பிரதமருக்கு விரிவான கடிதம் அனுப்பி, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான முந்தைய அரசின் காலத்தில் மேகதாது அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சீராய்வு மனுக்கள் மற்றும் மறு சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அந்த சட்டநடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சூழலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டினார்.
எனினும், காவிரி உரிமை என்பது அரசியல் பிரச்சினை அல்ல; அது தமிழக மக்களின் வாழ்வுரிமை தொடர்பான அடிப்படை பிரச்சினை என்றும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அரசு சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P