எதிர்க்கட்சிகளின் சதித் திட்டம் முறியடிப்பு - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களின
நயினார்


தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.)

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே மத்திய அரசின் முதன்மை நோக்கம் என்றும், மாணவர் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தனது பதவியை தார்மீக பொறுப்புடன் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ₹10 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டம், புதிய Anti-Paper Leak Bill 2026 உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த பின்னரும் மாணவர் போராட்டம் தொடர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

அமைதியான மாணவர் போராட்டத்திற்குள் சமூக விரோத அமைப்புகள் ஊடுருவி, தேச ஒற்றுமைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை பயன்படுத்த முயன்றதால் போராட்டம் வன்முறையாக மாறி, பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேசத்தின் ஒற்றுமையையும், மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ததாகவும், இது தோல்வி அல்ல; தார்மீக நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர்களின் குரலுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு எப்போதும் செவிசாய்க்கும் என்றும், இந்த நிகழ்வு நாட்டில் கருத்துரிமையும் அடிப்படை சுதந்திரமும் நிலவி வருவதற்கான எடுத்துக்காட்டு என்றும் தனது பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P