Enter your Email Address to subscribe to our newsletters

பழனி, 26 ஜூலை (ஹி.ச.)
வாராந்திர ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், பொதுத் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதிகாலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர்.
இதனால், அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்குச் சென்றனர். இதன் காரணமாக வின்ச் சேவையை பயன்படுத்த நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
பொதுத் தரிசன வரிசைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மலைக்கோயிலில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக தற்காலிக ஒருவழிப்பாதை திறக்கப்பட்டு, பக்தர்கள் ஒழுங்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்யும் நோக்கில், கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
Hindusthan Samachar / GOKILA arumugam