Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசில், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு மற்றும் சபாநாயகர் தொடர்பான விவகாரங்களை மையமாகக் கொண்டு இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சுமார் 80 நாட்களாக பாஜக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அண்மையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களிலும் பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பதைத் தவிர்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 20-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான கோப்பை முதலமைச்சர் என். ரங்கசாமி, துணைநிலை ஆளுநரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியது. இருப்பினும், ஐந்து நாட்களுக்கு மேலாகியும் இலாகா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், பாஜக கேட்ட துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், இன்று காலை நடைபெற்ற கார்கில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அரசு நிகழ்ச்சியிலும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இந்த புறக்கணிப்பு சம்பவம், என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணியில் நிலவும் விரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P